Sunday, January 4, 2015

வணக்கம் 2015

வணக்கம் 2015 J
வந்துவிட்டது 2015. புத்தாண்டு அன்றே எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. எனவே இன்று எழுதுகிறேன். ஒரு நதி கடலில் கலப்பதை போலவே கால பெருஞ்சமுத்திரத்தில், 365 நாட்கள் ஐக்கியமாகிவிட்டன. அனேகமானவர்கள் கழுத்து வலிக்க கடந்தாண்டை திரும்பி பார்த்து முடித்திருக்கக்கூடும். இந்த நேரத்தில் நானும் கொஞ்சம் கொசுவர்த்தி சுருளாய் பிளாஷ் பேக் போவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

சென்ற 2014 ஜனவரியின் முதல் நாளே மிகவும் விஷேசமாக அமைந்தது. அது உயிர்மையின் 10 புத்தக வெளியீட்டு விழா. மனுஷ்யபுத்திரன், அமிர்தம் சூர்யா, முருகேசபாண்டியன் என நிறைய ஆளுமைகளை கொண்ட மேடை.

ஆனால் அது தான் 2014-ல் நான் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி இலக்கிய கூட்டம். தினசரி நாளிதழில் பணியாற்றும் செய்தியாளன் இலக்கிய வட்டத்துக்குள் சஞ்சரிப்பது என்பது ஒரே அடுப்பில் இரண்டு பாத்திரங்களை வைத்து சமைப்பதற்கு சமம். ஆனால் அந்த சாகசத்தையும் சிலர் அருமையாக செய்து வருகிறார்கள்.

பள்ளி காலங்களில் புத்தாண்டு என்பது, கேபிள் டிவியில் புதுப்படம் பார்ப்பது, பக்கத்து வீட்டு அக்காள்களின் கோலத்துக்காக happy new year ஸ்பெல்லிங் சொல்லி கொடுப்பது, என்றே இருந்தது. குறிப்பாக, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிகிற ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் புத்தாண்டும் பிறக்கும்.  ‘டேய் மணியண்டா, சுவாலஜி சார் பேப்பர் திருத்திட்டாராம்’ என்று எவனாவது போகிற போக்கில் வயிற்றில் வனஸ்பதியை கரைத்துவிட்டு போவான். அவ்வளவு தான் புத்தாண்டு புஸ்ஸாகி விடும். கல்லூரி காலத்தில் செமஸ்டர் விடுமுறை அல்லது ஸ்டடி ஹாலிடேசில் வரும் புத்தாண்டுகள் மனதில் நிற்கவேயில்லை.

365 நாட்கள் கடந்து போவது மட்டுமே ஒரு வருடத்தின் முடிவு அல்ல என்பது இப்போது தான் புரிகிறது. ஜனவரியில் தங்கைக்கு நிச்சயதார்த்தம். பிப்ரவரியில் வெறுமை. மார்ச்சில் ஒரு பைக் ஆக்சிடண்ட், ஏப்ரல் முழுக்க வீட்டில் ஓய்வு, மே மாதம் முழுக்க எலக்‌ஷன் கவரேஜ், ஜூனில் தங்கை திருமணம், ஜுலையில் தென் மாவட்டங்களுக்குள் பயணம். ஆகஸ்டில் வீட்டு ஓனருடன் சண்டை, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த ஐந்து மாதங்களில் படிப்படியாக பணியிட பொறுப்புகளும் அதிகரித்து 2015-ஐ சவலான விஷயமாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம், மவுலிவாக்கம் கட்டிட சரிவு, தே.ஜ கூட்டணி உருவாக்கம், சட்டப்பேரவை நடவடிக்கைகள் என நிறைய அனுபவங்கள் பணி ரீதியாகவும் வாய்த்தன. ஏராளமான புதிய நண்பர்கள் நண்பிகள். வழக்கம் போலவே கொஞ்சூன்டு எதிரிகளை பரிசளித்தது 2014.

பிறந்ததிலிருந்தே மிகக்குறைவாக புத்தகம் படித்த ஆண்டு என்றால் அது 2014 தான். ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள், வா.மணிகண்டனின் லிண்ட்சே லோஹன், சேத்தனின் ஹாஃப் கேர்ள் பிரண்ட் தவிர பெரிதாக எதையும் படிக்கவில்லை. கவிதை தொகுப்பை வெளியிட வேண்டும் என்று ஒரு நோட்டை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஆனால் அந்த கனவும் ஈடேறவில்லை. இப்போது அதை எடுத்து பார்த்தால், இதையெல்லாம் புக்கா போடலாமா என்றே யோசிக்க வைத்துள்ளது.

இந்தாண்டு மாதம் 3 புத்தகங்களையாவது படிக்க வேண்டும். மாதம் ஒரு கட்டுரைகயையாவது எழுத வேண்டும். ஒரு குறும்படம் இயக்க வேண்டும். இப்படி நிறைய வேண்டும்கள் மனத்துக்குள் அலைபாய்கின்றன. இதையெல்லாம் ஈடேற்ற நிறைய உழைப்பு தேவை.. நிச்சயமாக  வேலைக்கு தீணி போடும் ஆண்டாக வந்துள்ள 2015-க்கு வணக்கம் சொல்லி உழைக்க தயாராகிவிட்டேன்.
               ---ஆல் தி பெஸ்ட் டியர்ஸ்---
-                                                                                                         -  மணி