Monday, October 27, 2014

பட்டாம்பூச்சியாலான பால்யம்!!

பாலை வனத்தின் வெம்மையை நினைத்து பிரம்மித்த போது மதகுகளை மூடி காவேரியை காட்டியது கர்நாடகம். சிரபுஞ்சியின் மழைக்காற்றின் ஈரத்தை யோசித்த போது, எப்போதுமில்லாமல் வயல்கள் காவேரியாகின. அம்மாக்களின் சமத்துக்களை கவனிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் மகள்கள் மருமகளாகியிருந்தனர். கடவுகளை கைகளில் பிடிக்க நினைத்த கனத்தில் பட்டுப்பூச்சிகள் சிறகு முளைத்து பட்டாம்பூச்சிகளாயின.

பால்யத்தில் பூண்டுச்செடிகளை பொறுக்கி மயில் தொகை போல் கோர்த்து பட்டாம்பூச்சிகளை பிடிக்கும் ரகுவரன் தான் எங்கள் கேங்க்ஸ்டார். வண்ணப்பட்டாம்பூச்சி கிடைத்தால் ரோட்டில் காசு கிடக்கும்; மஞ்சள் பட்டாம்பூச்சி பிடித்தால் கணக்கில் நூற்றுக்கு நூறு எடுக்கலாம்; கருப்பு பட்டாம்பூச்சியை பிடித்தால் தூக்கில் தொங்கிய கற்பகம் பேயாக வந்து பயமுறுத்தும்.இது தான் பட்டாம்பூச்சி பிடித்தலில் நாங்கள் வகுத்துக்கொண்ட ஆரூடங்கள்.

ஒருமுறை ஆற்றில் குளித்த ஈரத்தோடு பட்டாம்பூச்சி பிடித்ததில் சுகந்திக்கு காய்ச்சல் வரவே, கருப்பு பட்டாம்பூச்சிகளை பிடித்ததால், அவளை கற்பகம் பயமுறுத்தியதாக பேசத்தொடங்கினோம். அன்று முதல் கருப்பு பட்டாம்பூச்சிகள் எங்கள் பூண்டுச்செடிகளில் அகப்படாத சுதந்திர ஜீவன்கள் ஆகின. வண்ண பட்டாம்பூச்சிகள் மட்டும் எங்கள் கைகளில் சிக்கிக்கொண்டேயிருந்தன. ரகுவரன் பட்டாம்பூச்சி தலைவனான்.

ராமச்சந்திரனுக்கு கணக்கு என்றால் உயிரென்பதால், அவன் மட்டும் ஆர்.எஸ்.பதி காடுகளில் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை தேடியலைவான். மஞ்சள் பட்டாம்பூச்சி கிடைக்காத நாட்களில் வெள்ளை பட்டாம்பூச்சியை பிடித்து வந்து கலர்பொடி தூவி மஞ்சளாக்கிவிடுவான். கள்ள ஆட்டம் ஆடினாலும் அவன் தான் கணக்கில் டாப்பர். பட்டாம்பூச்சி பிடிக்கும் பரபரப்பிற்கு நடுவே நாங்கள் பால்யத்திலிருந்து இளைமைக்கு இடம்பெயர்ந்திருந்தோம். இம்முறை பூண்டுச்செடிகள் தம்பிகளின் கைகளுக்கு போயிருந்தன. அசன்டிங் ஆர்டர், டிசண்டிங் ஆர்டர் என கணக்குப்போட்ட நாங்கள், (a+b)2 அல்ஜீப்ராவுக்கு மாறியிருந்தோம்.

பட்டாம்பூச்சி பிடித்த காலம் வரை நூற்றுக்குநூறு வாங்கியிருந்த ராமச்சந்திரன், அல்ஜீப்ரா காலத்தில் பார்டரில் பாஸானான். சில மாதங்களில் பார்டர் தேய்ந்து முட்டை மார்க் எடுக்கவே, பிரம்பால் வெழுத்து வெளியில் முட்டி போட வைத்தார் சோமு வாத்தியார். மஞ்சள் பட்டாம்பூச்சி பிடிப்பதை நிறுத்தியதால் தான், ராமு மக்காகிவிட்டான் என நம்பிய சிறுவர்கள், ஆர்.எஸ்.பதிகளை படையெடுத்தனர். 

பிரம்புகள் முறிந்த கணக்குகளை எண்ணிய ராமச்சந்திரன், படிப்பு வேலைக்காவாது என்று சுப்ரமணியன் உரக்கடையில் கணக்குபிள்ளையாகிவிட்டடான். ராமச்சந்திரனுக்கு மீசை முளைத்தது. அவன் மீசையில் மயங்கிய ஒரு பட்டாம்பூச்சியுடன் அவன் திருப்பூர் பக்கம் பறந்திருந்தான்.

கணக்கு வாத்தியார் ரிட்டையர்டு ஆனதில், வண்ணப்பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் ரகுவரன் கைகளுக்கு பிரம்புகள் வந்து சேர்ந்தன. எங்கு தேடினாலும் பட்டாம்பூச்சிகள் கிடைப்பாதாகயில்லை என்பதால், பிள்ளைகளும் டோரா பூச்சிகளை தரிசிக்க பழகிக்கொண்டார்கள். மின்வெட்டின் போதுமட்டும் டிவியின் கருந்திரையில் கற்பகம் போல் ஏதோவொன்று பயமுறுத்துகிறதாம் .

-மணிகண்டன் நமஷ்
28/10/2014


Saturday, October 18, 2014

பரிசுத்தமென்பது!!


கர்நாடக நீதிமன்றம் போட்ட விலங்குகளுக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் சாவி கிடைத்துள்ளது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். மழையில் நனைகிறார்கள். ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் உயர்த்தி ஜோராக ஆடுகிறார்கள் . லாலு, சவுதாலா, ராசா, ஜெகன் மோகன், எடியூரப்பா போன்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுவே ஜெ.வுக்கும் நடந்துள்ளது.

ஜாமின் கிடைத்த அன்று மதியம் போயஸ் கார்டனில் தான் பணி. திடீரென்று பேய்மழை பிடித்துக்கொண்டது.  ‘வானம் எங்கம்மாவுக்காக ஆனந்த கண்ணீர் விடுதுடா’ என்று அதிமுகவினர் தற்குறிப்பேற்றவணியில் பேசினார்கள்.  ஒதுங்கக்கூட இடமில்லை. எந்த பக்கம் ஓடினாலும் கேட் போட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் முட்ட முடியும். கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு புதுக்கட்டிடம் மட்டுமே கேட் போடாமல் இருந்தது. வானம் லேசாக மின்னியதில் மவுலிவாக்கம் நினைவுக்கு வர கொஞ்சம் பேக் அடித்தேன். ஆனாலும் மழையின் தாக்கம் புதுக்கட்டிடத்துக்குள் நுழைய வைத்தது.

கொஞ்சம் ஓரமாக அன்னாந்து பார்த்தேன். அது 11 மாடி கட்டிடமெல்லாம் இல்லை. 4 அல்லது 5 மாடிகள் தான். கால்களை கொஞ்சம் ஊன்றி நின்றேன். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் ஓய்வில் அவர்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தார்கள். 35 வயது மதிக்கத்தக்க அக்கா ஒருவர், “அப்பாடா ஒரு வழியா அம்மா திரும்பிட்டாங்க. ஊரெல்லாம் பொண்டாட்டி வச்சுருக்கவன், லட்சம் கோடி ஊழல் பண்ணவனெல்லாம் வெளில சுத்துறான். நம்ப அம்மா என்ன பண்ணாங்கன்னு புடிச்சு போட்டானுக. இந்தா சிங்கமாறி வெளியே வந்துட்டாங்கல்ல. அம்மா மாறி வரமுடியுமா” இப்படியாக ஒரு அரை மணி நேரத்துக்கு அம்மா புகழ் பாடிக்கொண்டிருந்தது அந்த அக்கா.

மழை விடவேயில்லை. நேரமாக நேரமாக அந்தக்காவின் பேச்சு வேறெங்கேயோ போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது இறந்து போன தன் கணவர் பற்றி ஆரம்பித்தது. “என்னாடி ஊருல எல்லாம் யாராச்சும் செத்தா, சாவுக்குமட்டுந்தான் சட்டிபிகேட்டு கேப்பான். இங்க சுடுகாட்டு சட்டிபிகேட்டுலாம் கேக்குறான். அதை வாங்குறதுக்கு ரெண்டு மாசமா அழைஞ்சுகிட்டு இருக்கேன். 500 குடு, ஆயரம் குடுனு இழுக்கடிக்கிறான்” என்று நமைந்தார். பின்னர் மீண்டும் அம்மா புராணத்தை ஆரம்பித்தார்.

லஞ்சமும் ஊழலும் எவ்வளவு அழகாக பழகி போய்விட்டது. இங்கே பெரிதா சிறிதா என்பது மட்டுமே தான் பிரச்சினை. ஸ்பெக்ட்ரமா சொத்துக்குவிப்பா, ஹெலிகாப்டரா ஆதர்ஷா, சாரதா சிட் ஃபன்டா மாட்டுத்தீவனமா என்பது தான் பேசுபொருள். ஒரு முதலமைச்சர் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பதுக்கும், ஒரு கடைநிலை அதிகாரி நூறு ரூபாய் லஞ்சம் வாங்குவதற்கும் இடையில் உள்ள தூரம் ஒருவரின் கைகளை பரிசுத்தமாகவும், இன்னொருவரின் கைகளை கறைபடிந்ததாகவும் சித்தரிக்கின்றன.

இவர்களுக்கு பின்னே எத்தனை சித்தால்கள், நடவுக்கு போகும் பெண்கள், ரயில் நிலையங்களில் கொய்யாக்கூடை தூக்குபவர்கள் என எவ்வளவு பேரின் உழைப்புகள் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மண்டையில் விழும் கோடாரியின் குருதியை துடைத்தபடி, உதட்டால் முத்தமிடவது போலத்தான், ஊழல் அரசியல்வாதிகளை கொண்டாடுவதும்.

காங்கிரஸ், திமுக, பாஜக, அதிமுக என்று விதி விலக்கெல்லாம் இல்லை. ஆட்சியதிகாரத்தில் ஊழல் என்பது ஒதுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு ஸ்பெக்ட்ரம் , அதிமுகவுக்கு இந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த  லெஸ் தென் கிரேட்டர் தென் கேமில் இன்றைக்கு அதிமுக தான் பரிசுத்தம்.

-மணிகண்டன் நமஷ்
18-10-2014


Tuesday, October 14, 2014

போதையென்னும் பெருஞ்சக்கரம்!!


பேருந்து பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டது. சாமியார் மடம் நிறுத்தத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு ஏறினார். குழந்தைக்கு 2 வயதிருக்கும். பேருந்து வேகமெடுத்தது. தனியார் பேருந்தென்பதால் வழிநெடுகிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டது, கூட்டம் கொள்ளளவை தாண்டியது. அந்தப்பெண்மணி நெரிசலுக்குள்ளானாள். குழந்தை வியான் வியான் என்று பீரிட்டது.

அழுத குழந்தையிடம் செல்போனை காட்டி கை நீட்டினேன். மறுப்பேதுமின்றி மடியில் வந்து அமர்ந்தது.  ‘ஏம்மா…. எல்லாம் உள்ள போ உள்ள போ’ என்ற கண்டக்டரின் கனீர் குரல், அந்த பெண்மணியை இரண்டு தப்படி உள்ளே போக வைத்தது. சுற்றி முற்றிப்பார்த்த குழந்தை மீண்டும் விரீர் என்று அழ ஆரம்பித்தது. அழுகை சத்தம் பேரிரைச்சலானது. இது தான் தாய்மையை பிரிதல்.

ஆனால் அன்பு அழவில்லை. அவன் மிகச்சாதரணமாகவே இருந்தான். பிளாட்பார்மில் தூங்க ஆரம்பித்த நாளிலேயே அவன் இதை எதிர்பார்த்திருக்கக்கூடும். எந்த காலையிலும் தான் ஆதரவற்றவனாகலாம் என்பதை அவன் அறிந்திருக்கக்கூடும்.

இந்த நாளை மிகப்பெரிய பரபரப்போடு தொடங்கிவிட்ட நம்மில் பலருக்கு அன்புவை தெரியாது. வேளச்சேரியில் பிளாட்பாரம் மீது கார் ஏறியதில் மூவர் பலி என்ற செய்தியை கடந்த நமக்கு இந்நேரம் வரை அன்புவின் ஞாபகத்தை கொண்டிருக்க வாய்ப்பில்லை.

அன்புவுக்கு பெரிதாக சொந்தக்காரர்கள் இல்லை. தாய் தந்தை மட்டும் தான். தாய் கர்ப்பமாக இருந்ததால், அவன் தம்பியையோ, தங்கையையோ கனவுக்கண்டிருக்கக்கூடும். சாமான்யர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குத்தான் நிறைவேறியிருக்கிறது.அன்புவின் கனவுகளுக்கும், ஓங்கியொரு முற்றுப்புள்ளியை வைத்தாகிவிட்டது. இச்சமூக பெருங்கடலில் அன்பு நேற்று முதல் தனி மனிதன். இரண்டு நாள் முன்புவரை அதே பிளாட்பாரத்தில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை எண்ணியவன் இன்று முதன் முதலாய் கூரைகளுக்கு கீழே வாழ்வை தொடங்கியிருக்கிறான்.

“இந்தா இவடத்த குந்திகினு தான் வெளையாடுங்க, முந்தாநாத்து ராத்திரிக்கூட தம்பி பாப்பா வேணுமா, தங்கச்சி குட்டி வேணுமானு அம்புவும் அம்மாக்காரியும் வெளாண்டுச்சுங்க. போன மாசம் வரை நார்த் மெட்ராஸுல இருந்துச்சங்களாம். இங்க தரமணி, தாம்பரம்னு பாட்ல் பொறுக்கினு சுத்துனுச்சுங்க. ஆறுமுகம் சமத்துக்காரன்பா. ஒரு நாளைக்கு எப்டிக்கா 100 பாட்லாவது இட்னு வந்துருவான். அந்தம்மா அயிஸ்வர்யா மாசமா இருந்தனால வேளச்சேரி தாண்டி எங்கயும் போவாது. இந்த அன்புப்பய அவன் வயசுக்கு ஒரு பிளாஸ்டிக் பேப்பரவுடமாட்டான். கின்னி எடுத்துன்னு போய் அம்மா ஓட்டல்ல இட்லி கட்டியாந்து இந்தா இந்தாப்புல வச்சு தான் துண்ணுங்க. குடிக்கார ---------- ங்க வண்டியவுட்டு எத்திடுச்சுங்க” வேளச்சேரி பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் ஒருவர் அன்புவின் குடும்பத்தை பற்றி ஒருவர் விளக்கினார்.
போதையென்னும் மாபெரும் சக்கரத்தில் சிக்கி அட்ரஸ் இல்லாத ஒரு குடும்பம் சுக்குநூறாகிவிட்டது. நமது வழக்கமான ஆசா பாசங்களில் ஒன்றைக்கூட நினைக்காதவர்களால் மட்டும் தான் பிளாட்பாரத்தில் குடியேற முடியும். அவர்கள் 1BHK வீட்டை  யோசிப்பதில்லை, கார் வாங்குகிற கனவு கிடையாது, மகனை எந்த கான்வெண்ட்டில் சேர்ப்பது என்ற ஏக்கங்கள் இல்லை. இந்த அரசிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமல்ல குறைந்த பட்சம் ரேஷன் கார்டை கூட அவர்கள் கேட்டதில்லை. கடைசி வரை உயிர் வாழ மட்டுமே வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மிக நுன்னிய ஏக்கத்திலும் இந்த ஊர் எவ்வளவு கோரமாக காரேற்றி இறக்கியிருக்கிறது.

காரேற்றிய அந்த மூன்று பேரால், அரசுக்கு அன்றைய நாள் அதிகபட்சம் ஒரு 3000 ரூபாய் வருமாணம் கிடைத்திருக்கக்கூடும். அந்த 3000 ரூபாய்க்கு பின்னால் மூன்று மனிதர்களின் இயக்கம் நின்று போயிருக்கிறது. காவலர்களும் அந்த போதை ஆசாமிகளை பிடித்துவிட்டார்கள்.

ஆனால் அன்றிரவு போதையோடு இருந்தது அவர்கள் மட்டும் தானா? காரேற்றியதால் அவர்கள் குற்றவாளிகள். ஆனால் அந்த எண்ணத்தை ஏற்படுத்தியது மது. குற்றம் செய்ய தூண்டியது மது. மதுவை விற்பது அரசாங்கம். அரசாங்கத்தை உருவாக்குவது யார்? நாம் தானே??

இதோ அந்த மூவர் மது அருந்திய டாஸ்மாக் கடை இன்றும் திறந்துவிட்டது. நிறைய பேர் கூடிவிட்டார்கள். ஆறுமுகம், ஐஸ்வர்யா சாப்பிடுகிற அந்த அம்மா உணவகமும் திறந்து தான் கிடக்கிறது. இன்றைக்கும் சில ஆறுமுகங்களும், கர்ப்பினி ஐஸ்வர்யாக்களும் அங்கு பசியாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நேரம் அன்பு ஏதோ என்.ஜி.ஓ-வின் அரவணைப்பில் துயிலுறங்கி கொண்டிருக்கலாம் அல்லது தன்னைப்போன்ற பிள்ளைகளுக்கு பின்னே தட்டை ஏந்திக்கொண்டு சாப்பிட காத்திருக்கலாம்.

பேப்பர் பொறுக்குவது, அம்மா ஓட்டலில் சாப்பிடுவது என்ற இலகுவான வாழ்க்கையை வாழ்ந்த அன்புவை முதல்முறையாக போதையென்னும் ஆயுதம் இச்சமூகத்திற்கே சேர்த்து தாக்கியிருக்கிறது. இனி இச்சமூகம் அன்புவை எப்படி பார்க்க போகிறது என்பதைவிட இனி இந்த சமூகத்தை அன்பு எதிர்கொள்ள போகிறான் என்று தெரியவில்லை. சதுரங்க வேட்டை நட்டியின் கதாபாத்திரம் தான் ஞாபகம் வருகிறது.

போதையின் வெறியில் ஒரு சிசு பிறக்கவே அருகதையற்றதாகி விட்டது. தமிழகத்தின் ஏதோ ஒருமூளையில் கைவிடப்பட்ட மூதாட்டி, அத்தனையே ரோசத்தோடு தனியே கிளம்பி வந்தது, வேளச்சேரி பிளாட்பாரத்தில் அகால மரணமடையத்தானா?


கைதானவர்கள் இன்னும் 2 வாரத்தில் ஜாமினில் வெளி வந்துவிடுவார்கள். இதோ நாமும் நுரைக்க நுரைக்க இரக்கப்பட்டுவிட்டோம். இனி என்ன மிச்சமிருக்க போகிறது. நம் நாளை தொடர்வோம்..  

// மணிகண்டன் நமஷ்
14-10-2014