Saturday, September 14, 2013

இன்றியமையாதவை......மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது என்பன பிரிக்க முடியாத இலவச இணைப்புகள். அதுபோலத்தான் பெருநகரத்தின் காற்றும். தீதும் நன்றும் அதில் ஒன்றாய்  திரிந்தலையும். ஆக்ஸிஜனை கொண்ட அதே காற்றில் மதுரவாயலோரம் மலையளவு நிற்கும் குப்பையின் துகல்களும் கல்ந்தே இருக்கிறது. இந்த இரண்டிற்கும் அப்பால் இன்னொன்றும் சென்னைக்காற்றில் கலந்திருக்கிறது. இங்கு பலருக்கு அது தான் இரண்டாம் ஆக்ஸிஜன்.

வேறென்ன, “வணக்கம் சென்னை நான் ரமேஷ் பேசறேன். நீங்கள் கேட்டு கொண்டிருப்பது என்று நம்மைவிட நம் மீது அதிகம் உரிமை கொண்டாடி தடதடக்கும் ரேடியோ ஜாக்கிகளின் குரல்கள் தான் அவை.  

‘சென்னைக்குப் போய் மொதல்ல யார்ட்டயாவது அசிஸ்டெண்ட்டா சேரனும்,அப்படியே மூனு வருஷத்துக்கு அப்புறம் பாலா மாதிரி பெரிய டைரக்டராவோ இல்லை சசிக்குமார் மாதிரி டைரக்டர் கம் நடிகராகவோ ஆகிடனும்” என்ற கலர் கலர் கனவுகளோடு திருச்சியிலும்,மதுரையிலும், சேலத்திலும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தேறும் கனவுக்கண்கள் இன்னும் வற்றவில்லை.இந்தக் கனவுகளை கட்டமைத்ததில் பெரும்பாலான பங்கு ராகத்திற்கும் தாளத்திற்கும் தான். 

கத்திப்பாரா வந்திருச்சு, கிண்டிலாம் வாங்க என்று கண்டக்டர் கத்தும் போது புஷ் பேக்கை நிமிர்த்தி இயர் போனை சொருகினால் கனவுகளுக்கு பாலிஷ் போடுவது போல் எஃப்.எம்.ல் கந்த சஷ்டி கவசம் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது நல்ல சகுனம்டா என்று கொக்கரிக்கும் மனது, பின்னாளில் அதே எஃப்.எம்.ல்  ‘ஆறு மனமே ஆறு’ கேட்பதும் காலத்தின் அதிதீவிரமான விளையாட்டுகளில் ஒன்று.

       பொறியியல் முதலாமாண்டு என்பதை மசாலா ஆண்டு என்று தான் சொல்லவேண்டும்.அந்தளவுக்கு ஆங்கிலம்,கணக்கு,வேதியியல்,இயற்பியல் என +2வில் படித்த எல்லாமும் இருக்கும் என்ன அந்தந்த பாடப்பெயருக்கு முன்னாள் இன்ஜினியரிங் என்றோ டெக்னிக்கல் என்றோ ஒரு வார்த்தைக்கூட இருக்கும் அப்படிதான் 4 வருடங்களுக்கு முன்னர் எலக்ட்ரானிக் டிவைஸஸ் அண்ட் சர்க்யூட் என்று ஒரு பேப்பர் இருந்தது. அதுக்கு ரெக்கார்ட், லேப், பிராக்டிக்கல் போன்ற கொடுமைகள் வேறு. உலகில் ஆகப்பெரிய துன்பியல் சம்பவம் உண்டென்றால் அது இன்ஜினியரிங் மாணவர்கள் ரெக்கார்டு சைன் வாங்குவது தான்.  ‘என்ன டேட் மாத்தி போட்டுருக்க, இது எக்ஸ்பரிமண்ட் நம்பர் 13 ஆச்சே  ஆர்டரே இல்லாம எழுதிருக்க, என்ன இதுக்கு கீ சரியில்ல, ரிசிஸ்ட்டரா இது, ஏதோ தீபாவளிக்கு கொழுத்துற பாம்பு மாத்திரை மாதிரி இருக்கே, ஆம்பியருக்கும் ஓஹ்முக்கும் வித்தியாசம் தெரியாதா போய் மாத்துங்க”என்று அக்டோபரில் எழுதி முடித்த ரெக்கார்டுக்கு டிசம்பரில் தான் சைன் கிடைக்கும்.
அப்படியொரு டிசம்பர் பெருநாளின் மாலை நேரமொன்றில் இன்பரசி மேடத்திடம் ரெக்கார்டை நீட்டினேன். எல்லாவற்றிற்கும் ரைட் போட்டுக்கொண்டே வந்தார். எனக்கு பின் ரெக்கார்ட் கையெழுத்து வாங்க இரண்டு பேர் வேறு. நேரம் மாலை 5.30ஐ தாண்டியது. பஜனை மாதமென்பதால் கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த முருகன் கோவிலில் ’கோகுலத்தில் மாயக்கண்ணன்’ என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டு ஓட ஆரம்பித்தது. ரைட் போட்டு கொண்டிருந்த மேடம், சட்டென வாட் நான் சென்ஸ் என்று கத்தினார், ஆண்டி கிளைமேக்ஸ் ஓடும்போது அமிதியாகும் திரையரங்கம் போல் அறையே நிசப்தமானது. என்னை அறியாமலேயே கோகுலத்தில் மாயக்கண்ணன் பாட்டுக்கு லைட்டான வாய்சில் லிப் மூவ்மெண்ட் கொடுத்து தொலைத்துவிட்டேன்.

அதை கண்டுபிடித்துதான் மேடம் டென்ஷன் ஆகிவிட்டார். பின்பு வழக்கம் போல கடுப்பாகி ஸாரிக்கு மேல் ஸாரி கேட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு ரெக்கார்டு சைன் வாங்கி, மாலை பேட்சில் யுனிவர்சிட்டி பிராக்ட்டிக்கல் முடித்தேன். பாடல் நம்மையே நம்மிடமிருந்து இழக்க செய்கிறது அல்லவா??.
     
      அயோத்தியாப்பட்டினம் அருகே ஒரு பாணிப்புரி கடை உண்டு.அங்கே தினமும் ஹெட் செட் மாட்டிகொண்டு வரும் சத்தியக்குமார் அண்ணன், மிகவும் நெருக்கமானவர். தனது ஐ-பாடில் கண்ணதாசன் முதல் மதன் கார்க்கி வரை அனைத்து பாட்டையும் குவித்து வைத்திருப்பார். நான் வேறு கவிதைலாம் எழுதுவேன் என்று சொல்ல, எங்க சொல்லு பாப்போம் என்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. தினமும் அந்த பாணிப்புரி கடையில் சந்திக்கும் நாங்கள் ராக ரசிகர்களாகவும் கவிதைப்பிரியர்களாகவும் செய்த அட்டூழியங்கள் ஏராளம். 
           திடீரென இளம்  ஆன்மீகவாதி ஒருவரின் ஆன்மீக முகாம் ஒன்று எங்கள் கல்லூரியில் நடத்தப்பட்டது (வீடியோவில் சிக்குவதற்கு முன் சிங்கம் எங்க காலேஜுக்கு தான் வந்து போச்சு. புரியுதா யாருன்னு). ஆன்மீக முகாம் காரணத்தால் கல்லூரிக்கு ஒரு வாரம் லீவு விட்டார்கள். விடுதியிலிருந்து கிளம்பிய நான் நேரே கடைக்கு போய் சத்தியக்குமார் அண்ணனோடு சேர்ந்து ஒரு ப்ளேட் மசால் பூரி சாப்பிட்டுவிட்டு அவருக்கு டாட்டா காட்டி பேருந்தெறினேன். கல்லூரி திறந்த போது பின்னாடியே செமஸ்டரும் வர அதிகம் அவுட்டிங் போக முடியாமல் போனது.( நாம பெரிய படிப்பாளிலாம் கிடையாது வார்டன் விடல. )

      இந்த நிலையில் தேர்வுகள் முடிந்து மீண்டும் ஒரு வாரம் லீவு. திரும்ப வீடு வாசம் அதனால் கடைக்கு விஜயம் செய்ய முடியவில்லை. லீவு முடிந்து கல்லூரி திறந்த முதல் நாளே சத்தியக்குமார் அண்ணனின் முகம் நினைவுக்கு வர அன்று மாலையே பாணிப்புரி கடைக்கு போனேன். ஆள் வரவில்லை.  ‘சத்தி அண்ணேன் முன்னாடியே வந்துட்டு போய்ட்டாரா ’ என்று கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டே அவர் வீட்டுக்கு போகும் சந்தினை பார்த்தால், அந்தப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள். ‘போன வாரம் ஹெட்செட்ட மாட்டிகிட்டு வாக்கிங் போறேன்னு தண்டவாளத்துல போயிருக்காரு, பின்னாடி ஏற்காடு எக்ஸ்பிரஸ் தட்டிருச்சு” என்ற கடைக்காரரின் குரல் ஆயுளுக்கான வருத்தத்தை அப்படியே இதயத்தில் இறக்கி வைத்தது.

புத்தி சுவாதீனம் கெட்டவர்களுக்கு காகிதங்கள் மீதும் பாடல்கள் மீதும் அப்படி என்னதான் பிரியமோ. பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் சுடுகாடு அருகே, பினமெரியும் மாலையொன்றில் தலைவிரி கோளத்தோடு பழுப்பேறிய தந்தி தாளை படித்த பொண்ணுரங்கு நினைவை இங்கு  மாம்பலத்தில் கிளறுகிறார் ஒரு வயதான பாட்டி. நானிருக்கும் அப்பார்ட்மெண்டின் கீழே 3-வது வீட்டு வாசலில் நைந்த நைட்டி சகிதம் பழுப்பேறிய பேப்பர்களோடு உட்கார்ந்திருப்பார் அந்தப்பாட்டி . அதே மாலை வேளையென்றால் பி.சுசீலாவாகவோ, எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியாகவோ மாறியிருப்பார். உடனே வீட்டினுள் இருந்து தொப்பையும் தொந்தியுமாக வரும் ஆசாமி பாட்டை நிறுத்த சொல்லி கையிலிருக்கும் கட்டையால் மட்டார் மட்டாரென்று நான்கு போடுவார்.

ஆனால் பாட்டியோ ரிவர்ஸ் வெர்ஷன். தலையில் தட்டியதும் சீராய் ஓடும் பழைய டிரான்சிஸ்டர் போல அப்போது தான் அவர் வேகமாக பாட ஆரம்பிப்பார். ஒரு சனிக்கிழமை மாலை குறையொன்றுமில்லை பாடிய அவரை உற்றுப்பார்த்தேன். கல்லெறிந்ததில் கலைந்து பறந்த குயிலைப்போல் பாட்டை நிறுத்திக்கொண்டு உள்ளே புறப்பட்டார்.

மின்சார ரயில் யாசகனின் ‘அதோ அந்த வானம் போல’, மாநகர பேருந்தில் புட் போர்டு அடிக்கும் மாணவர்களின் ‘ஆடிப்போனா ஆவணி’,மன்னடியின் புழுதி சந்தில் கசியும்  ‘எனக்கென பொறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ’ ஸ்பென்சரிலும்,எக்ஸ்பிரஸ் அவன்யூவிலும் சுற்றித்திரியும் ட்யூடுகளின் ஹெட்போனுக்குள் கிறங்கும் ஜஸ்டின் பைபர் என எங்கும் பாடல் எதிலும் பாடல். பாடல்கள் வெறும் கீதங்கள் அல்ல வாழ்வியலின் அடையாளம். பணக்காரர்கள் குடித்துவிட்டு பப் பார் என்று சுற்றும் அதே நேரத்தில்  அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதமில்லாமல் வயிறொட்டி கிடக்கும் ஆப்ரிக்க பழங்குடிகள் ஆடிப்பாட மறப்பதில்லை.பின்ன ஆராரோவில் ஆரம்பிக்கும் மனித வாழ்க்கை மூச்சு நின்றபின் சுவைப்பதும் டண்டனக்காவை தானே..


                                // மணி

Saturday, August 17, 2013

நாங்க B.E, M.E, படிக்க போறோம்..,,, நாளைக்கு ???நான் கற்ற கல்வி என் சமூகத்திற்கு உதவவில்லை என்றால் என்னை நானே சுட்டுக்கொள்வேன் என்றார் டாக்டர் அமேத்கர். இன்றைக்கு தமிழ்நாட்டில் வருடத்திற்கு 2 லட்சம் இன்ஜினியரிங் மாணவர்கள் வெளியே வருகிறார்களாம். ஆனால் அவர்கள் கற்ற கல்வி இந்த சமூகத்திற்கு இல்லை குறைந்தபட்சம் அவர்களுக்கே உதவுவதாக இருப்பதில்லை என்று தான் தோன்றுகிறது.
4 வருஷம், 8 செமஸ்டர், 48* பேப்பர், 20*லேப், ப்ராஜெக்ட் இத்தனையையும் சந்திக்கும் மாணவன், கற்றுகொள்வதை காட்டிலும் பிழைத்துக்கொள்வதை தான் அதிகம் விரும்புகிறான். சும்மா சொல்லவில்லை, உங்களுக்கு அருகில் ஒரு 100 மீட்டர் சுற்றளவிற்குள் உத்தேசமாக ஒரு பொறியியல் மாணவன் நிற்கக்கூடும். ‘வாட் இஸ் என்ஜினியரிங்? என்று ஒரே கேள்வியை மட்டும் கேட்டு பாருங்கள். பதில் சொல்ல என்ன பாடுப்படுவார்கள் என்று புரியும். ஆனால் அப்படிப்பட்டவர்ளே ஃபேஸ்புக்கிலும், ஜி+லும் 'Proud to be an engineer' என்று குரூப் ஆரம்பித்து, அதில் 'My reaction when my HOD scolds me' என்று சந்தானம், கவுண்டமணி போன்ற காமெடி நடிகர்களின் வித்தியாசமான் முகபாவனைகளை பதிவேற்றுவார்கள். இது தான் proud to be an engineer ஆம்.
ஏற்கனவே இந்த விஷயத்தை வைத்து, கோட்டு சூட்டோடு டாக் ஷோக்காரர்களும் தங்களது டி.ஆர்.பி.யை  நிறையவே ஏற்றிக்கொண்டுவிட்டனர். இருந்தும் மாற்றமில்லை. ஆயுத பூஜைக்கு பொரிகடலை விற்பதை போல் பொறியியல் சீட்டுக்களையும் வாரி வழங்குகிறது அண்ணா பலகலைக்கழகம். எல்லாரும் மோகத்திலும் வேகத்திலும் போய் விழுகிறார்கள். ராப்பகலாய் படித்து பாஸ் ஆகிறார்கள். ஆனால் 8 வது செமஸ்டர் முடித்து வேலை தேடும் படலத்திற்கு வரும்போது அதுநாள் வரை அந்த படிப்பின் மீது இருந்த  ஆசை, ஈர்ப்பு, காதல் எல்லாம்   காணாமல் போய்விடுகிறது. ஏண்டா என்ஜினியரிங் படிச்சோம் என்ற புலம்பல்களை  சர்வ சாதாரணமாக கேட்க முடிகிறது
சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது , ‘உன்னையெல்லாம் என்ஜினியரிங் படிக்க வச்சு ரோட் ரோடா வேலை தேடி அலையவிட்டிருக்கனும்டா, உனக்கு போய் நாலு ஆடு மாட வாங்கி கொடுத்து உன்ன உருப்புட வச்சேன்ல இப்டிதான் பேசுவஎன்று ஒரு தந்தை பேசுவதை போல் வரும்.
12வது முடித்ததும், தான் சாதிக்கக்கூடிய துறையை எது என்பதை கண்டுகொள்ளவதற்கான ஆற்றலை இன்றைய பள்ளி கல்வி முறை மாணவனுக்கு வழங்கவில்லை. ‘அதை படிடா’ என்று பெற்றோர் சொல்வதும் பேருக்கு பின்னால பி.இ.,  முன்னால Er. என்ற வார்த்தைகளின் கவர்ச்சியும் தான் அந்தப்பக்கம் செல்ல வைக்கிறது. ஆண்களின் நிலை இப்படி பெண்களின் கதையே வேறு, பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளை பி.இ. படிக்க வைத்துவிட்டால் எப்படியும் ஒரு M.E. அல்லது M.B.A மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்துவிடலாம் என்று கல்யான கணக்கு போட்டுத்தான் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்.
எனக்கு தெரிந்தே கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு 2-ம் ஆண்டு படிக்கும் போதே திருமணம் ஆனது. மாப்பிள்ளை எம்.இ. முடித்துவிட்டு வேறு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருந்தார். கூடவே  பி.எச்.டி.க்காக கையிடை தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள். திருமணம் செய்துகொண்ட அந்த மாணவி மூன்றாமாண்டு படிக்கும் போது  நிறைமாத கர்ப்பினியாக தேர்வறைகளுக்கு வந்து போன காட்சி விழிமுன் விரிகிறது. அதற்கு பின் போராடி சிரமப்பட்டு டிகிரி வாங்கியவர், இப்போது குழந்தை குடும்பம் என்று வாழ்க்கையை கழித்து வருகிறார். இதற்கு ஏன் பொறியியல் டிகிரி,  அன்றாட குடும்ப வாழ்க்கை தான் என்று முடிவான பின் பெற்றோர்கள் எதற்காக பொறியியலை தேர்வு செய்ய வைக்க வேண்டும்.
மேல்சொன்ன மாணவிக்கும் பொறியியல் படித்துவிட்டு பி.பி.ஓ , கே.பி.ஓ என்று சம்பந்தமில்லாமல் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பெற்றோர்களின் முடிவும் கனவும் பிள்ளைகளின் தோல்களில் இறக்கிவைக்கப்படுகிற போது, அவர்களின் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடக்கூடாது என்று அவர்களும் இப்படி கால் செண்டர் கனவாண்களாக மாறிவிடுகிறார்கள்.

பேஷனுக்காக கூட்டத்தோடு கூட்டமாக பி.இ. படிப்பை தேர்வு செய்யாமல், அதில் ஆர்வமும் தனியாக சாதிக்க வேண்dடும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அந்தப்பக்கம் செல்வது நன்று.

Friday, August 16, 2013

தலைவா---- :-)


தலைவா!!!- 

அயல்நாட்டு படங்களை தழுவி மதராசப்பட்டினம், தெய்வத்திருமகன், தாண்டவம் போன்ற இறவாத தமிழ்க்காவியங்களை தந்த ஏ.எல்.விஜய், நிச்சயம் சென்றாண்டு 3 இன் 1 டி.வி.டி.யில் நாயகன்,தேவர் மகன், நாட்டாமை போன்ற படங்களை ஒரே நேரத்தில் பார்த்திருக்க வேண்டும்.

“அப்பாக்களை கொல்லும் வில்லன்களை அறச்சீற்றம் கொண்டு அழிக்கும் கதாநாயகன்கள்” என்னும் தமிழ்சினிமாவின் பழைய பஞ்சுமிட்டாய் தான் படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டுவதா இல்லை சீராட்டுவதா என்று தெரியாமல் தமிழ்ச்சமூகம் திகைத்து நிற்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

டைட்டில் கார்டில் உலகத்தலைவர்கள் பெயர் மற்றும் பிறந்த வருடங்களை ஓட்டிக்காண்பித்துவிட்டு முதல் ஃப்ரேமிலேயே வில்லனை காட்டுகிறார்கள் கூடவே விநாயகரும். ‘நாலையிலிருந்து மொத்த மும்பையும் என் கண்ட்ரோல்டா’ என்று வில்லன் டயலாக் பேசியதும், அவர் ஒரு டான் என்றும் டானுக்கெல்லாம் டானாகாத்தான் ஏதோ ட்ரை பண்ணுகிறார் என்றும் அந்த வசனத்தின் வேகத்தில் புரிந்தது.

அடுத்த நொடியே தமிழர்கள் வாழும் பகுதியான மும்பை தாராவி நீராவியாகிறது. பம்பாய் படத்தில் பார்த்ததை போல் குர்தா போட்ட பயில்வான்கள் பல்க்காக வந்து, பெட்டிக்கடைகளில் இருக்கும் முறுக்கு டப்பாக்களை தேடிப்பிடித்து உருட்டுக்கட்டைகளால் அடித்து நொறுக்க்க்குகிறார்கள். ஊரே கலவராக்காடாகி கிடக்க ஸ்பாட்டிற்கு வரும் இளைஞர் சத்யராஜ் அங்கே இருப்பவர்களை காப்பாற்றுகிறார்.

ஆனால் இன்னொரு டானான நாசர், ‘விட்டுறேன்… இன்னையோடு எல்லாத்தையும் விட்டுறேன்’ என்றபடி அன்பு மகன் சந்தாணத்தோடு அயல்நாடு எஸ்கேப் ஆக பார்க்கிறார். ஆனால் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா போன்ற சூடான இளைஞர்கள்ப்படை, ‘நீங்க இப்டி போய்ட்டா இந்த சனங்கள யார் காப்பாத்தாறது என்று விக்கும் வீரமுமாக தடுத்து நிறுத்துகிறது. இருந்தும் நோ சொல்லிவிடுகிறார் நாசர்.

அப்போது தான் சத்தியராஜை துளைக்க வரும் குண்டை அவரது இல்லாள் ‘என்னங்க….’ என்று ஓடிவந்து தன் மீது வாங்கிக்கொண்டு உயிர் துறக்கவே ராமதுரையாக இருக்கும் சத்யராஜ் அண்ணாவாகிறார். அதாவது டானுக்கெல்லாம் டான்.

தான் டானாக இருக்கிற விஷயம் மகனுக்கு தெரியக்கூடாது என்று ஆஸ்த்திரேலியா அனுப்பிவைத்துவிடுகிறார். அங்கே அருப்பெரும் டான்ஸராகி ஆஸ்த்திரேலியவாசிகளின் மைக்கெல் ஜாக்ஸனாக அறியப்படுகிற விஜய் ஒரு மினரல் வாட்டர் கம்பெனி நடத்துகிறார். கூடவே ப்ரோவாக சந்தாணம். டைமிங் ரைமிங் என்னும் பழைய பருப்பை ரொம்ப நாட்களாகவே வேக வைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்த உருப்படி அமலா பால்.விஜயின் டான்ஸ் ட்ரூப்பில் சேருகிறர். டடடாட…. டாடடையின்…. டாடடையின் டாடையின் என்னும் கமலின் புன்னகை மன்னன் பிட்டைப்போல வரும் ஒரு சீக்வென்சில் காலொடிந்த அமலாவை விஜய் கதக்களிக்க ஆடவைக்கிறார்.

ஆத்தீ…..அப்போது அமலா பாலின் கால்களை அவ்வளவு க்ளோஸ் அப்பில் காட்டியிருக்க தேவயில்லை. தயவு செஞ்சு அமலா பாலோட கால இன்னொரு படத்துல க்ளோஸ் அப்ல காட்டாதீங்க ப்ளீஸ்..என்று கதறும் தமிழ் ரசிகனுக்கு படைப்பாளிகள் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்.

அமலாவை கண்டதும் காதலிக்கிறார் விஜய், கூடவே சந்தானமும். சந்தானம் தன் காதலை சொல்ல போகும் போது ஏகப்பட்ட எவர்கிரீன் மற்றும் சோலார் ஸ்டார்களும் ரோஜாவோடு நிற்க ஆஃப் ஆகிவிடுகிறார் சந்தானம்.

இதுகூட பரவாயில்லை விஜய் தன் காதலை சொல்லப்போகும் போது, ‘அகிலாண்ட நாயகன், யூட்யூப் இளவரசன் , புவர் ஸ்டார் என்ற பலப்பட்டங்களுடன் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சாம் அண்டார்சனை, காதலித்து திருமணம் செய்து கொண்டுவிட்டதாக அமலா பால் பெரிய பல்ப் கொடுக்கிறார்.

ஹீரோவாச்சே சும்மாவா அமலா பால் சொல்லும் பொய்யை கண்டுபிடித்து விடும் விஜய் காதலுக்கு ஓ.கே வாங்கி அப்பாவிடமும் அனுமதி பெற அமலாவோடு மும்பை பறக்கிறார். அங்கே தான் அமலா பால் கிரைம் பிராஞ்சில் ஒரு சின்சியர் போலீஸ் ஆஃபிஸர் என்பதும் டான் சத்யராஜை பிடிக்க விஜயை பயன்படுத்தினார் என்பதும், உலகமாக சீக்ரெட், சஸ்பென்ஸ், ரகசியம், ட்விஸ்ட் என்றும் சொல்கிறார்கள்.சிந்து சமவெளி அமலாபால், விஜயை டீஸ் செய்யும் போலீஸா கண்டிப்பா வாழ்க்கை ஒரு வட்டம் தான்.

அப்பறம் சத்யராஜ் செத்து போக, விஜய் வெளை சட்டை ஷேடோ ஜீன் மீசை சகிதம் விஷ்வா பாய் ஆக, மக்களை காப்பாத்த போக … ஷ்ஷப்பா… முடியல…. அதுக்கப்புறம் தான் கொலைகுத்தே இருக்கு. நீங்களும் தேவர் மகன், நாயகன் பாத்துருப்பீங்கன்னு நம்புறேன். எது எப்படியோ ஹீரோ ஹீரோயின் சேர்ந்துடுவாங்க அப்புறம் வில்லன் செத்துடுவாரு இப்படியொரு வித்தியாசமான க்ளைமாக்சோடு முடிகிறது படம்.

இதுக்கு போய் தடையெல்லாம் ரொம்பவே டூ மச்தேன்… என்ன பண்ண அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு போ வேண்டியதாயிருக்கு.

//மணி

Tuesday, July 2, 2013

தொலைதல்....


இன்று மாலை தி.நகர் ரயில்வே ஸ்டேஷன் பைக் பார்க்கிங் ஏரியாவை கடந்து சென்றபோது '' தம்பி" என்ற குரல் நிறுத்தியது. யாரோ மணி கேட்கத்தான் அழைக்கிறார்கள் என்று திரும்பி பார்த்தால், மங்கலான வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு ஆண் ,ராமர் ஊதாவில் நைந்த பூனம் புடவை கட்டிய பெண் என்ற மத்திய வயது தம்பதி கூடவே ஒரு டவுசர் சட்டையோடு 10 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவனும் நின்றிருந்தான்.''தம்பி.., கோவில்பட்டிலேர்ந்து திருப்பதி போலாம்னு வந்தோம், இங்க சென்னைல பாவிய பணத்த திருடிட்டானுவ தம்பி,ஏதாவது உதவி பண்ணுங்க" என்றார்கள். ஊர்லேர்ந்து கிளம்பி வந்தேன் ப்ளேடு போட்டாய்ங்க என்பவர்களையும் யும், ஒருவர் தள்ள கைகாலில் துணியை சுற்றிக்கொண்டு தள்ளுவண்டியில் கை ஏந்தி வருபவர்களையும் நிறையவே பார்த்துவிட்டதால்,இவர்களும் அதுபோலத்தான் என்ற முடிவுக்கு வந்தவனாக நடையை கட்டினேன்.கொஞ்ச தூரம் செல்வதற்குள் மறுபடியும் "தம்பி,,, ரொம்ப பசிக்குதுயா சாப்பாடாவது வாங்கிக்கொடுப்பா" என்ற வார்த்தை என்னவோ செய்தது, பாக்கெட்டை துளாவினால் மாதக்கடைசி வறுமைக்கு சாட்சியாக முப்பத்தி ஆறு ரூபாய் இருந்தது, 15ஐ அவர்களுக்கு கொடுத்துவிட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.
இருண்டும் இருளாத இந்த மாலை நேரத்தில் மாநகரின் பிரதான பகுதியின் ரகசிய முக்கில் 'பசி' என்று யாசிக்கும் இவர்கள் யார்??பணத்தை தொலைத்ததாக சொல்லும் இவர்களின் வாழ்க்கை எங்கே நசிந்து போனது?" என்று ஏராளமான கேள்விகள் என்னையும் சாப்பிடவிடவில்லை.
//மணி....

Monday, June 17, 2013

மேளக்காரரின் உலகம்!!

மேளக்காரரின் உலகம்!!

எல்லா திருமணங்களிலும் முதல் ஆளாக ஆஜராகி விடுபவர்கள் இந்த மேளக்காரர்கள் தான். வைகாசி, தை, மாசி போன்ற மாதங்களின்     அதிகாலை பயணங்களில் அவர்களை பேருந்துக்களில் உத்தேசமாக பார்த்திட முடியும். 2 அல்லது 3 மணி அளவிற்கே வீட்டை விட்டு கிளம்பியிருப்பார்கள்.கருகருவென்ற சுருட்டை தலை, மீசையற்ற வட்ட முகம், விசாலமான நெற்றி சந்தனம் மேல் குங்குமம் என எல்லோருக்கும் பொதுவாக பரிச்சயப்பட்டவர்கள் தான் அவர்கள். பட்டிற்கும் பருத்திக்கும் இடைப்பட்டதோர் துணியில் நெய்யப்பட்ட தடித்த கரை வேஷ்டி, ஜிகினா துணிகளில் உறையிடப்பட்ட கெட்டிமேளம், நாதஸ்வரம் என்று அவர்களின் அடையாளங்களே தனி.

எங்கள் ஊருக்கு அருகே அம்புக்கோயில் என்றொரு ஊருண்டு,அங்கு தான் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் மேளபார்ட்டிகளை புக் செய்வார்கள். குறிப்பாக சுப்ரமணியம் பார்ட்டிக்கு தான் அவ்வளவு மவுஸ். பாக்கு பழம் வெற்றிலை, கூட சில ஆயிரங்கள் தான் மேளக்காரர்களுக்கு கொடுக்கப்படும் கூலி. சமையல் ஆட்கள், வாழை மரம், சீரியல் பல்ப்புகள் என எல்லாமும் வந்தாலும், மேளக்காரர்களின் வருகைக்கு பின்னர் தான் மண்டபங்களுக்கு கல்யாண கலையே வரும். காபியோ டீயோ முடித்துவிட்டு வாசிக்க ஆரம்பிப்பவர்கள் கெட்டி மேள கொட்டிவிட்டு தான் ஓய்வார்கள், தாலிக்கட்டி முடிந்ததும் கூட்டம் முழுக்க பந்தியை நோக்கி படை எடுக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் கொஞ்சம் சால்வையை விரித்து கட்டையை சாய்ப்பார்கள்.சில நேரங்களில் விருந்தாளிகளை வரவேற்கும் தேவைக்கரரிடம், பாக்கி வர வேண்டிய காசை கேட்க, பந்தியின் வாசல், பன்னீர் தெளிக்குமிடம் என்று அங்குமிங்கும் தர்மசங்கடைத்தை சுமந்து திரிந்துகொண்டிருப்பார்கள்.           

சென்ற வாரம் திருமணம் ஒன்றிற்காக ஊருக்கு சென்றபோது அதே சுப்ரமணியம் பார்ட்டி தான் அந்த திருமணத்தில் வாத்தியம்.கடைசி முகூர்த்தம் என்பதால் அன்றைய தினத்தில் திருமணம்,காதுகுத்து,புதுமனை புகுவிழா,ஏன் சில கடை திறப்பு விழாக்களும் நிறையவே இருந்தது.நெருங்கிய சொந்தத்தின் திருமணம் நானும் வீட்டாரும் அதிகாலையே மண்டபத்திற்கு சென்றுவிட்டோம். கெட்டிமேளம் முழங்க கல்யாணமும் முடிந்திருந்தது, வாயிலிருந்து குழலை பிரித்த  நாதஸ்வரக்காரர் அந்த ஜிகினா துணிக்குள் லாவகமாய் மூடிவைத்துவிட்டு.  வெற்றிலை பெட்டியை திறந்து ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் என்னை அழைத்த அம்மா , பக்கத்துல கணபதி ஜிவல்லர்ஸ் நகைக்கடை திறப்பு விழா,அப்பா கட்டாயம் போச்சொன்னாரு பிரண்டாம்  போய் ஒரெட்டு தலைய காமிச்சிட்டு வந்திரு என்று சொல்ல  நானும் சென்றேன்.

நகை கடை என்றால் பிரின்ஸ்,லலிதா போல் கனவு காணக்கூடாது, எங்கள் ஊரில் நகைக்கடைகள் எல்லாம் சேட்டு கடை சைசில் தான் இருக்கும். கடைக்கு நுழையும் முன்னரே  தூக்கி வாரிப்போட்டது.சென்னையில் மினிஸ்டர்கள் வருகை, தொழிலதிபர்கள் பிறந்த நாள் போன்ற சுபயோக சுப தினத்தில்  இசைக்கப்படும் அந்த கேரள செண்ட மேளம்.அங்கே தூள் கிளப்பிக்கொண்டிருந்தது,  எதற்கு இதை இங்கே இசைக்கிறார்கள் என்று நெளிந்தேன், நகைக்கடைக்காரர் செட்டியாரு கைல காசு நெறையா இருக்கு செய்ய வேண்டியது தானே என்றான் நண்பன்.செண்டை மேளக்காரர்கள் நம்ம ஊர் கெட்டிமேளக்காரர்கள் போல் இல்லை ,மனோபாலா பாடி தான். மேல்சட்டை கிடையாது செண்டை தொங்க லாவகமாய் துண்டு மட்டும் கட்டப்பட்டிருந்தது.கூலி எவ்வளவு என்று விசாரித்த போது கொஞ்சம் தலை சுற்றியது.

இதுக்கு உஷாவோ , மோகனோ ஏதோ ஒரு மைக் செட்காரரிடம் சொல்லியிருந்தால் கேசட்டிலோ சிடியிலோ செண்டை மேளத்த அருமையா ஓடவிட்டிருந்திருப்பாருல என்று நினைத்துகொண்டேன்.அப்போது  மண்டபத்தில் கல்யாணத்திற்கு வாசித்த கெட்டி மேளக்காரர்கள்,வைபவம் முடித்து அந்த நகைக்கடை வழியே பேருந்தேற சென்றார்கள்.நகை கடையில்  இருந்த செண்டை மேளகாரர்களை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவர்களது பார்வையிலேயே தெரிந்தது. 

சினிமாக்காரைங்க தான் வெள்ளைக்காரன் வாத்தியத்துல பாட்டு போட ஆரம்பிச்சுட்டான் ஏதோ கல்யாணத்துலையும் காதுகுத்துலையும் மட்டும் நம்ம மேள சத்தத்தை சம்பிரதாயத்துக்காக  சம்பிரதாயமா கேக்குறான் தமிழன்,அதுலயும் இப்புடியா  என்று சுப்ரமணியிடம் ஆர்மோனியப்பெட்டிக்காரர் அலுத்து கொண்டு வேட்டியை இழுத்துபிடித்து நடந்தார்.

அடக்கொடுமையே அப்போது தான் ஆத்தா(பாட்டி ) சொன்னது  ஞாபகம் வந்தது முன்பெல்லாம் கல்யாணத்தில் மேளக்காரர்களுக்கு முன்னராக  திருமணத்தில்  தப்பிசைக்கப்பட்டு தான் தான் தாலி கட்டுவார்களாம்.அப்படி இருக்கையில் ஏதோ ஒருகாலகட்டத்தில் தான் இந்த கெட்டி மேளம் உள்ளே  நுழைந்தது என்பார் ஆத்தா. அவர் சொல்வது உண்மையா என்று தெரியவில்லை ஒரு வேலை இருக்கக்கூடும்,ஆனால் கொஞ்ச நாளைக்கு  ட்றம்பட்டின் ஆதிக்கமும் நம்மூர் விழாக்களில் ஓங்கி தான் இருந்தது. இதோ இப்போது அரசியல்வாதிகளின் தயவில்  கேரள செண்டை.

எல்லா இருப்புகளையும் ஏதோ ஒன்று இடம்பெயர்த்து கொண்டேதான் இருக்கிறது.

//மணி